கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு அபாயச்சங்கு ஊதப்பட்டு இருக்கிறது
கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையின் மூலம் தமிழக அரசுக்கு அபாயச்சங்கு ஊதப்பட்டு இருப்பதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான அறிக்கை தமிழக ஆட்சியின் அவலங்களை துறை வாரியாக அம்பலப்படுத்தி தோலுரித்து காட்டி இருக்கிறது.
இந்திய கணக்கு தணிக்கை துறை தமிழக அலுவலர் அறிக்கையில் கூறியுள்ளபடி மொத்தம் உள்ள 41 பொதுத்துறை நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் 2016–ம் ஆண்டு இறுதியில் ரூ.81 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 756 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த கடன் 2011–12–ல் ரூ.59 ஆயிரத்து 636 கோடியாக இருந்தது 2015–16–ல் ரூ.65 ஆயிரத்து 622 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் நிதி நிலைமை ஆண்டுக்கு ஆண்டு அதளபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டு இருப்பது குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதே நேரத்தில் தமிழக அரசின் வரி வருவாயும் சரிந்துகொண்டு வருகிறது. இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் தமிழக அரசுக்கு நிதி நிலைமையை எப்படி சீராக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவான நோக்கமோ, அணுகுமுறையோ இல்லாமல் இருப்பதுதான்.இப்படியே தமிழக அரசின் நிதி நிலைமை சென்று கொண்டிருந்தால் திவாலாகும் நிலை ஏற்படுவது நிச்சயம். இத்தகைய சீரழிந்த பொருளாதார நிலைமை இருக்கிற தமிழகத்தில் தொழில் முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
கணக்கு தணிக்கை அலுவலரின் அறிக்கையின் மூலம் தமிழக அரசிற்கு அபாயச்சங்கு ஊதப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து தமிழக அரசு விழிப்புணர்வு பெற்றாலும் நோய் கடுமையாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. இதனால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.தமிழகத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு அதன்மூலம் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, இதிலிருந்து மக்களை காப்பாற்றுகிற பொறுப்பை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்று செயல்படுத்தவில்லை எனில், அதற்குரிய விலையை எதிர்காலத்தில் வழங்க வேண்டி வரும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.