அமைச்சர்களின் இ-மெயில் விவரங்கள் அழிக்கப்பட்டது ஏன்? செங்கோட்டையன் பதில்


அமைச்சர்களின் இ-மெயில் விவரங்கள் அழிக்கப்பட்டது ஏன்?  செங்கோட்டையன் பதில்
x
தினத்தந்தி 22 July 2017 5:00 AM IST (Updated: 22 July 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்களின் இ-மெயில் விவரங்கள் அழிக்கப்பட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

மதுரை,

மதுரையில் நேற்று நடந்த தேசிய வாழைத் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக அமைச்சர்களும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். எனவே விரைவில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

தமிழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அதற்கான வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் அனைத்து பாடத்திட்டங்களும் முழுமையாக மாறி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், “ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர்களின் இ-மெயிலுக்கு புகார் அனுப்புமாறு பொதுமக்களை கமல் கேட்டுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக அரசின் இணையதளத்தில் இருந்த அமைச்சர்களின் இ-மெயில் விவரம் அழிக்கப்பட்டு உள்ளதே” என்று கேட்டனர்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “இது குறித்த விவரம் எனக்கு தெரியவில்லை. அப்படி அமைச்சர்களின் இ-மெயில் விவரங்கள் அழிக்கப்பட்டு இருந்தால் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Next Story