சிறு, குறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து ‘3 ஆண்டுகள் வரி விலக்கு பெற முயற்சிப்பேன்’ ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு


சிறு, குறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து ‘3 ஆண்டுகள் வரி விலக்கு பெற முயற்சிப்பேன்’ ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு
x
தினத்தந்தி 21 July 2017 10:15 PM GMT (Updated: 21 July 2017 7:31 PM GMT)

சிறு, குறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 3 ஆண்டுகள் வரி விலக்கு பெற முயற்சிப்பேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.

சென்னை,

கோவையை சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் சரக்கு, சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) குறித்து தமிழில் எழுதிய ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. துக்ளக் இதழின் ஆசிரியரும், ஆடிட்ட ருமான குருமூர்த்தி புத்தகத்தை வெளியிட பட்டர்பிளை நிறுவன தலைவர் லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ‘டை’ சென்னை அமைப்பின் தலைவர் ஆர்.நாராயணன், உறுப்பினர்கள் வி.சங்கர், எஸ்.வி. பாலசுப்பிரமணியம், ‘டை’ கோவை அமைப்பின் தலைவர் ஆர்.இளங்கோ, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

117 வரிகள் ஒரே வரியாக மாற்றம்

500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் பொதுமக்கள் அமைதியாக வரிசையில் நின்று அதனை ஏற்றுக் கொண்டனர். அதேபோன்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் போதும் ஏராளமான கருத்து வேறுபாடுகள், சிக்கல்கள் வரும். ஆனால், 117 வரிகள் தற்போது ஒரே வரியாக மாற்றப்பட்டுள்ளன.

இது கழுத்தில் சுளுக்கு விழுந்தவரின் சுளுக்கை எடுத்து விட்டது போன்ற ஒரு சுதந்திரம் ஆகும். சுங்கச்சாவடிகள் அழிக்கப்பட்டு இருக் கின்றன. இதனால் பண்டமாற்றத்தில் இதைவிட எளிதானது வேறு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. வரி போடும் கலாசாரத்தில் உள்ள லஞ்ச லாவண்யங்கள், அரசியல் ஆதாயங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு பெற முயற்சிப்பேன்

பணமதிப்பு இழப்பின்போது ஏற்பட்டதைபோல் இப்போதும் ஒரு அமைதி குலைவு ஏற்படும். அதை நம்மால் சமாளிக்க முடியும். ஆனால் சிறு, குறு வியாபாரிகள், சில்லரை சேவை செய்வோர், சாலையோர கடைக்காரர்கள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்படுவார்கள். இவர் களை பாதுகாக்க அரசும் முயற்சிக்கவில்லை. யாரும் முயற்சி எடுத்ததாகவும் தெரியவில்லை.

எனவே 4 முதல் 5 கோடி ரூபாய்க்கு கீழ் பணபரிமாற்றம் செய்பவர்கள்(சிறு, குறு வியாபாரிகள்) 3 ஆண்டுகள் ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறி வரிவிலக்கு பெற முயற்சிப்பேன். யார் யாரெல்லாம் இந்த வரியை ஏற்று வரிக்குள் வரமுடியாமல் இருப்பார் களோ அவர்களுக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு பெற முயற்சிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story