அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன


அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 22 July 2017 10:15 PM GMT (Updated: 22 July 2017 9:43 PM GMT)

அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்து விதமான காய்ச்சல்களும், அரசு எடுத்துவரும் தொடர் தீவிர நடவடிக்கைகளினால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல்களை பரவாமல் தடுக்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பள்ளி கல்வித்துறை, பொதுப்பணித்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை போன்ற துறைகளுடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான துரித செயல்பாட்டுக்குழு இயங்கி வருகிறது. எந்த பகுதியிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு, இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அறிய பெற்றவுடன், அரசு மருத்துவ நிலையங்களை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துக்கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக்கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனரகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அதனை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது கட்டிடங்கள், அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்டு, கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளினால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

சங்கரன்கோவில், பழனி, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டதால், பிற பகுதிகளில் இருந்து சிறப்பு நோய் தடுப்பு மருத்துவ குழுக்கள் மற்றும் பூச்சிதடுப்பு குழுக்கள் இவ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு நோய் தடுப்பு பணி செவ்வனே செய்யப்பட்டுவருகிறது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் டெங்கு உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களும் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசு எடுத்த நடவடிக்கைகளால், கொசுக்களால் பரவும் அனைத்து வகையான காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story