தொகுதி மக்கள் விருப்பப்படி எடப்பாடி அணியில் இணைந்தேன் ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி
தொகுதி மக்கள் விருப்பப்படி எடப்பாடி அணியில் இணைந்தேன் என ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டியை அளித்து உள்ளார்.
சேலம்,
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. அம்மா அணியில் இணைந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனது தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி உள்ளார். தடாகம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.17 கோடி, காவல் நிலையம் அமைக்க ரூ.2 கோடி, பாலம் கட்ட ரூ.2 கோடி, ஆணைக்கட்டி பகுதிக்கு மின்சாரம் வசதி செய்து கொடுத்து இருக்கிறார். மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். கோட்டாச்சியர் கட்டிடம் கட்ட ரூ.3 அரை கோடி, 2 பாலம் கட்ட நிதி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஐ.டி-.ஐ. கட்ட ரூ.2அரை கோடி, மருத்துவமனை கட்ட ரூ.1.34 கோடி, கோவையில் மேம்பாலம் கட்ட ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக மக்களை சந்தித்து எந்த அணியில் இருக்கலாம் என கருத்து கேட்டேன். ஆளும் கட்சியில் இருந்தால் பல திட்டங்கள் கிடைக்கும் என்று மக்கள் சொன்னார்கள். அவர்கள் கூறியதன் அடிப்படையில் தான் அ.தி.மு.க. அம்மா அணிக்கு வந்துள்ளேன். தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். இதனை திருமாவளவனே சொல்லி இருக்கிறார். இந்த சிறப்பான ஆட்சியில் இணைந்து பணியாற்ற நான் இங்கு வந்துள்ளேன். என்னை யாரும் கூப்பிட வில்லை. யாரையும் நான் இழுத்து வருவதற்கும் முயற்சிக்கவில்லை.
நான் மட்டும் தான் முடிவு செய்து இங்கு வந்து இருக்கிறேன். என்னை யாரும் கூப்பிடவில்லை.
கடந்த முறை மக்கள் விருப்பபடி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றேன். தற்போது தொகுதி மக்கள் கூறியபடி இங்கு வந்துள்ளேன். ஆட்சியை எதிர்த்து செயல்பட்டால் தொகுதியில் பல திட்டங்கள் கிடைக்காது. மக்கள் மத்தியில் பல கஷ்டங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன். யார் மீதும் குற்றச்சாட்டு சொல்ல விரும்பவில்லை. நாளை இந்த இயக்கம் ஒன்று சேரும். அவர்களும் (ஓ.பி.எஸ். அணி) வந்து இணைவார்கள். இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் தான் நன்றாக இருக்கும். இணைப்பு முயற்சி நடக்காததால் நான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தேன்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சியும் நடக்கிறது. கட்சியும் நடக்கிறது. ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மர்ம சாவு வழக்குக்கு பயந்து நான் இங்கு வரவில்லை, பதவிக்கு ஆசைப்பட்டு வரவில்லை. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களை பற்றி பேச விரும்பவில்லை. இரு அணிகளும் இணைய வற்புறுத்துவோம். முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தலைமை கழகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசினால் இரு அணிகளும் இணையும் என்று கூறினார்.
Related Tags :
Next Story