கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம் என எச்சரிக்கை, மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு


கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம் என எச்சரிக்கை, மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 July 2017 11:52 AM IST (Updated: 23 July 2017 11:51 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் சென்னை மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.



சென்னை, 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது.

இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வயல் வெளியில் எண்ணை குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுடன் மாணவ -மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தினமும் வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையிலும் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தவர  உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போராட்டத்தை முன் கூட்டியே தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார்  மெரீனா கடற்கரையில் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் நிறுத்தங்களில் மொத்தமாக யாராவது வந்து இறங்கினால் அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கின்றனர்.  மெரீனாவில் வழக்கத்துக்கு அதிகமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.

Next Story