விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2017 4:45 AM IST (Updated: 31 July 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனிடம், அவருடைய தந்தையார் மறைவுக்கு இரங்கலையும், என்னுடைய ஆறுதலையும் தெரிவித்தேன். தொடர்ந்து தி.மு.க. அவர்களுடைய உணர்வுகளுக்கும், போராட்டத்துக்கும் துணைநிற்கும் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளித்தேன்.’ என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– சென்னை போலீஸ் கமி‌ஷனர் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:– அப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்றால், குட்கா விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கரை தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இப்போது டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திரனை கைது செய்ய வேண்டும். அடுத்ததாக, கமி‌ஷனராக இருந்த ஜார்ஜையும் கைது செய்து விட்டு, அதை விற்றுக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கைது செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

விஜயபாஸ்கர் டெல்லி பயணம் ஏன்?

கேள்வி:– ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோருவது சம்பந்தமாக அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி டெல்லி சென்று வருவதால் ஏதாவது நடவடிக்கை இருக்குமா?

பதில்:– அவர்(விஜயபாஸ்கர்) அதற்காக போவது போல் எனக்குத் தெரியவில்லை. அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய வருமான வரித்துறை வழக்கு, குட்கா வழக்கு ஆகியவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள சென்று வருகிறார் என்று தான் நான் நினைக்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story