ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் மாற்றம் இல்லை அமைச்சர் காமராஜ் பேட்டி


ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் மாற்றம் இல்லை அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 31 July 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் மாற்றம் இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.

சென்னை,

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டு வந்தது. அதில், ரே‌ஷன் பொருட்கள் யார், யாருக்கு வழங்க வேண்டும், யார், யாருக்கு வழங்கப்பட வேண்டியதில்லை என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.

அதாவது, வருமான வரி செலுத்தும் நபரை உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், மாநில ஊராட்சி அமைப்புகள், மாநகராட்சி, மத்திய, மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், இவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினர், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பத்தினர் (ஒரே ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டுக்காக தினசரி வாழ்வாதாரத்துக்காக வைத்திருக்கும் குடும்பம் நீங்கலாக), வீட்டில் ஏ.சி. வசதி செய்திருப்பவர்கள், 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளை கொண்ட வீடுகளை வைத்திருப்பவர்கள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பங்கள், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்கள், அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட இதர நலத்திட்ட பயனாளிகள், விதவை மற்றும் திருமணமாகாத பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்துக்கும் அதிகமாக ஊனம் உள்ள உறுப்பினரை கொண்ட குடும்பங்கள்), குடிசை பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறி இருந்தது.

இந்த சட்டத்தை பின்பற்றி ரே‌ஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக அரசு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள்–2017 என்று உருவாக்கி அதை அரசிதழில் கடந்த மாதம் (ஜூலை) 5–ந் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த விதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் அமலுக்கு வரப்போவதாக சில தனியார் தொலைக்காட்சிகள் நேற்று செய்தி வெளியிட்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இதனை தமிழக அரசு மறுத்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவுத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பொது வினியோக திட்டத்தை சிறப்பான வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தோம். அதன்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

தமிழகத்தில் இதுநாள் வரை பொது வினியோக திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறதோ? அதே போன்று இந்த திட்டம் தொடரும். ரே‌ஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றி தமிழக அரசு கொண்டு வந்துள்ள விதிகளை அரசிதழில் வெளியிடுவது என்பது ஒரு நடைமுறை தான். எனவே, வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் மாற்றம் இல்லை. தொடர்ந்து பொது வினியோக திட்டத்தை மக்கள் நலன்கருதி ஏற்கனவே இருந்த முறைப்படி தமிழக அரசு செயல்படுத்தும்.

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதுவரை 1 கோடியே 20 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 15 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு வருகிறது. 56 லட்சம் கார்டுகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story