மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு


மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 2:45 AM IST (Updated: 31 July 2017 11:25 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று கூறிய ஐகோர்ட்டு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

சென்னை,

மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று கூறிய ஐகோர்ட்டு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22–ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த ஜூலை 14–ந் தேதி தீர்ப்பு அளித்தார். அதில், 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி. ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ஒரு தரப்புக்கு மட்டும் சலுகை வழங்கி, மற்றொரு தரப்புக்கு பாகுபாடு காட்டுவதுபோல உள்ளது. இந்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை.

இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தெளிவாக உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வின் நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவரது உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மாநில பாடத்தின் கீழ் படித்த மாணவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

மாநில பாடத்திட்டத்திற்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று வாதிடப்பட்டது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. இந்த வழக்கைப் பார்க்கும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பணியை, கடமையை சிறப்பாக செய்யவில்லை என்று கருத தோன்றுகிறது.

10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்புகள் தான் மேற்படிப்புக்கு நுழைவு வாயிலாக உள்ளன. ஆனால் அனைத்து தரப்பு மாணவர்களையும் சமமாக பாவிக்கும் நிலை, அனைத்து தரப்புக்கும் ஏற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இல்லை. மேல்நிலைப்பள்ளிகளும் போதிய எண்ணிக்கையில் இல்லை. அரசுப்பள்ளிகளில் போதுமான கல்வித்தரம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு, மாணவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். தற்போது, அரசு பள்ளி மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் தங்களைத் தாங்களே மேம்படுத்தி வருகின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய நபர்களும் முறையாக தங்களது பணிகளை செய்யவில்லை.

அதே நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மாநில பாடத்திட்ட மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் திறமையை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை 3 அல்லது 5 ஆண்டுகள் இடைவெளியில் மாற்றியமைத்து தேசிய அளவிலான போட்டித் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

எனவே, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை இனியாவது தமிழக அரசு மேம்படுத்தும் என நம்புகிறோம்.

எனவே, இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை இனியும் தமிழக அரசு தாமதப்படுத்தக்கூடாது. இந்திய மருத்துவ கவுன்சில் ஆகஸ்டு 31–ந் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story