மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது அன்புமணி ராமதாஸ்


மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 2 Aug 2017 2:00 AM IST (Updated: 1 Aug 2017 10:53 PM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறுகளை வெட்டுவதற்கான ஆய்வு நடத்த மட்டுமே தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்கான நிலக்குத்தகை உரிமத்தை வழங்கியது அ.தி.மு.க. அரசு தான் என்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கதிராமங்கலம் மக்களுக்கு செய்த துரோகத்தை மூடி மறக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.

கதிராமங்கலம் கிராமத்தில் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இருமுறை அப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. அரசு தான் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினேன். அது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன்.

ஆய்வு செய்ய அனுமதி அளித்த தி.மு.க. அரசுக்கு கதிராமங்கலம் பாவத்தில் பங்கு கிடையாது என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது, ‘‘அரளி விதையை அரைத்துக் கொடுத்தது மட்டும் தான் நான். வாயில் திணித்தது அவன் தான் என்பதால் கொலைக் குற்றத்தில் எனக்கு பங்கு இல்லை, நான் நிரபராதி’’ என்று கூறுவதைப் போன்று உள்ளது.

கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, நெடுவாசல், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்தது தி.மு.க. அரசு தான். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 28–8–1989 அன்று அனுமதி அளித்ததும் தி.மு.க. அரசு தான். இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, ஒரு பாவமும் செய்யாத அப்பாவி போன்று நடிப்பதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.

இப்போதும் கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் தயாரா?.

தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதற்காக மெட்ரோ ரெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது என்ன வகையான நியாயம் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கட்சி தி.மு.க.

கதிராமங்கலம், நெடுவாசல், நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு செய்த பாவங்களில் இருந்து தி.மு.க. ஒருபோதும் விடுபட முடியாது. தி.மு.க. செய்த பாவங்களுக்கு மக்கள் விரைவில் தண்டனை அளிப்பர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story