தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது? உத்தேச தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் தாக்கல் தீர்ப்பு தள்ளிவைப்பு


தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது? உத்தேச தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் தாக்கல் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2017 5:30 AM IST (Updated: 2 Aug 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பது குறித்த உத்தேச தேர்தல் அட்டவணையை ஐகோர்ட்டில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பது குறித்த உத்தேச தேர்தல் அட்டவணையை ஐகோர்ட்டில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், கடந்த ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை பின்பற்றி பிறப்பிக்கவில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

மேலும் அந்த உத்தரவில், ‘உள்ளாட்சி தேர்தலில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்கவேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலை (2016–ம் ஆண்டு) டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த மாதம் 26–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், ‘தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் வரையிலான நடவடிக்கைகளுக்கு 50 நாட்கள் தேவைப்படும்’ என்று கூறினார்.

இதையடுத்து, ‘உள்ளாட்சி தேர்தலின் உத்தேச அட்டவணையை ஆகஸ்டு 1–ந்தேதி அன்று தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் பி.குமார், வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆஜராகி, உத்தேச தேர்தல் அட்டவணையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர்.

பின்னர் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story