ரசிகர்கள் கண்டுபிடித்த முட்டை ஊழல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பரபரப்பு தகவல்


ரசிகர்கள் கண்டுபிடித்த முட்டை ஊழல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:30 AM IST (Updated: 2 Aug 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

அழுகிய முட்டைகள் வழங்கி ஊழல் செய்து இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார்.

சென்னை

பெரம்பலூரில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கி ஊழல் செய்து இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டி விமர்சித்ததை அமைச்சர்கள் கண்டித்தனர். ஆதாரம் இல்லாமல் குறை சொல்வதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து ஊழல் ஆதாரங்களை திரட்டி அமைச்சர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் திடீரென்று அமைச்சர்களின் இ மெயில் முகவரிகள் மாயமானது. அவர்களின் இணையதள முகவரிகள் மூடப்பட்டதை தொடர்ந்து ஊழல் ஆதாரங்களை சென்னை ஆலந்தூரில் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்பு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கும்படி கமல்ஹாசன் அறிவுறுத்தினார். ரசிகர்களும் ஊழல் ஆதாரங்களை திரட்டி ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் ஊழல் நடந்து இருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு நல்ல முட்டைகளுக்கு பதிலாக அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக கமல்ஹாசன் ரசிகர்களுக்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கமல்ஹாசன் ரசிகர்கள் ஒரு அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த மையத்தில் உள்ள 3 முதல் 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பெரம்பலூர் மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

பெரம்பலூர் ஒன்றியம், நகரம், வேப்பந்தட்டை ஒன்றியம், குன்னம் ஒன்றியம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் சோதனை நடத்தி அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதை கண்டு பிடித்தோம் என்றும் அவர் கூறினார். அழுகிய முட்டைகளை படம் பிடித்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கமல்ஹாசன் ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

அந்த ஆதாரங்களை கமல்ஹாசனுக்கும் ஊழல் தடுப்பு பிரிவுக்கும் அனுப்பி உள்ளார்கள். இந்த முட்டை ஊழலை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு அம்பலபடுத்தி இருக்கிறார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க தோழர்கள் வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும்.”

இவ்வாறு கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார். 

Next Story