அமித்ஷா 22–ந் தேதி தமிழகம் வருகை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அமித்ஷா 22–ந் தேதி தமிழகம் வருகை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 3 Aug 2017 2:30 AM IST (Updated: 2 Aug 2017 10:36 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா 22–ந் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் வர உள்ளதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா 22, 23 மற்றும் 24–ந் தேதி ஆகிய 3 நாட்கள் தமிழகம் வருகை தருகிறார். கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை நேரடியாக சந்தித்து, வழிகாட்டி நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் அமித்ஷா வருகிறார். அவருடைய வருகை தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராமேசுவரத்துக்கு அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறப்பதற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ‘தமிழகம் இனி திட்டங்களால் பயன் அடையப்போகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசியல்வாதிகளுக்கு அது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். படகுக்காரர்கள், இனி பணக்காரர்கள் ஆவார்கள்.

உணவு பாதுகாப்பு திட்டம் பற்றி தமிழகத்தில் தவறான தகவல் பரப்புகிறார்கள். பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களை எல்லாம் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆயிரம் ரூபாயை தாண்டி இருந்த சிலிண்டர் விலை தற்போது 500–க்கும் குறைவாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. ‘நீட்’ தேர்வு சம்பந்தமாக கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், கூட்டணியில் இருந்தபோது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினால் எந்த திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டுவரமுடியவில்லை. இலங்கை பிரச்சினைக்கு கூட அவர்களால் தீர்வு காணமுடியவில்லை.

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேரப்போகிறார் என்பது யூகம். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணையவேண்டும்.

‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது. அரசியல் பேசும் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் துறைகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, அரசியல் பேசவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story