பல்கலைக்கழக நூலக புத்தகங்களை செல்போனில் படிக்கும் வசதி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


பல்கலைக்கழக நூலக புத்தகங்களை செல்போனில் படிக்கும் வசதி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக நூலக புத்தகங்களை செல்போனில் படிக்கும் வசதி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக நூலகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளுக்கான 68 லட்சம் பாடப்புத்தகங்கள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. எனவே மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே புத்தகங்களை இணையதள வசதி கொண்ட செல்போன் மூலம் படிக்க முடியும்.

அவர்கள் நூலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இதனை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது அறிக்கையில் அறிவித்தார். விரைவில் இந்த திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் மின்னிதழ்கள் பயன்பாட்டில் 7–வது இடத்தில் உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக பி.பி.செல்லத்துரை நியமிக்கப்பட்டார். அவரை நேர் காணல் நடத்தித்தான் கவர்னர் நியமித்தார். அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அதுகுறித்து நான் எதுவும் கூறக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.



Next Story