ரே‌ஷன் கடைகளில் குறைவில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் விளக்கம்


ரே‌ஷன் கடைகளில் குறைவில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் விளக்கம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 11:29 PM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் கடைகளில் குறைவில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றிருந்தாலும், பொது வினியோகத் திட்டத்தின்படி அனைவருக்கும் ரே‌ஷன் கடைகளில் குறைவில்லாமல் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பொது வினியோகத் திட்டத்தை அதன் தன்மை மாறாமல் செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்–2013 அமல்படுத்தப்பட்ட பிறகு, பொது வினியோகத் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து தமிழக அரசு விலகியதுபோல் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான செய்திகளை கூறி வருகிறார்.

7.10.2016 தேதிட்ட மத்திய அரசுக் கடிதத்தில் தெரிவித்துள்ள முடிவின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருந்திருந்தால், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வந்த மானிய விலை அரிசியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும்.

எனவே, 27.10.16 அன்று, அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் தன்மை மாறாமல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் பயனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த அளவிலான அரிசி அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் பெற தகுதியுள்ள அரிசியின் அளவு, இவற்றில் எது அதிகமோ அந்த அளவிலான அரிசியை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

உதாரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி என நிர்ணயித்துள்ளபோதிலும், ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அரிசி என்ற அளவிலேயே தற்போதும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்ற வரையறை கைவிடப்பட்டுள்ளது. 10 நபர்கள் கொண்ட ஒரு குடும்பம் தற்போது மாதம் ஒன்றுக்கு 50 கிலோ அரிசியை பெறும் தகுதி பெற்றுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32–ன்படி மாநில அரசின் செலவில், பயனாளிகள் பெறத் தகுதியுள்ள அரிசியின் அளவை அதிகரிக்கவோ அல்லது பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 10, மாநில அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் கண்டறிய வழிவகை செய்கிறது. எனவே தேவைப்படுகின்ற அனைத்து குடும்பங்களையும் முன்னுரிமை பட்டியலில் கொண்டு வரும் நோக்கத்தில், முன்னுரிமை குடும்பங்களை கண்டறிவதற்கான விதிமுறைகளை 27.10.2016 அன்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கணக்கீட்டின்படி தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களில் 62.55 சதவிகித மக்களும், நகர்புறங்களில் வசிப்பவர்களில் 37.79 சதவிகித மக்களும் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பயன்பெற தகுதி படைத்தவர்கள். இந்தநிலையில் 18.60 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகள் உள்ளிட்ட 98 லட்சம் முன்னுரிமை குடும்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு, முன்னுரிமை குடும்பங்களின் பட்டியல் www.tnpds.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரிமையற்ற குடும்பங்களின் பட்டியலும் அந்த வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் அனைத்தும் 26.1.2017 அன்று கிராமசபையின் முன் வைக்கப்பட்டுள்ளன.

பயனாளிகளின் வகைபாடும் அவ்வப்போது மாறுதலுக்குரியது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களை கண்டறிவது அத்தியாவசியமான ஒன்றாகும். இம்மாநிலத்திலுள்ள குடும்பங்கள், முன்னுரிமை பெற்ற குடும்பங்கள் அல்லது முன்னுரிமையற்ற குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்கள் பெறும் தகுதியைப் பொறுத்தவரை எவ்வித வேறுபாடும் கடைபிடிக்கப்படவில்லை.

எனவே, முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் அனைத்திற்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் தொடர்ந்து வழங்கப்படும். 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட விதிமுறைகளை வலியுறுத்தியே மீண்டும் 05.07.2017 அன்று தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுவதற்கு ஏதுவாக, மாநில அரசு விதிகளை உருவாக்குவது சட்டப்படி கட்டாயமான ஒன்று. எனவேதான் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

மாநில உணவு ஆணையம் அமைத்தல், அனைத்து நிலைகளிலும் விழிப்பு குழுக்கள் அமைத்தல், மாவட்ட அளவில் நுகர்வோர் குறைதீர் அலுவலர் நியமித்தல் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் வழிவகை செய்கிறது. தமிழகத்தில் அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதில் எவ்வித மாற்றமுமில்லை. ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 1.96 கோடி குடும்ப அட்டைகள் அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டிலேயே உள்ளன. இதுவரை 1.20 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. 20 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்ப அட்டைதாரர்களின் புகைப்படம் பெறுதல் மற்றும் தமிழில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகள் முடிந்தவுடன் விரைவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story