‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் கோரிக்கை


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 3:30 AM IST (Updated: 2 Aug 2017 11:32 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் கோரிக்கை

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்விற்கு (நீட்) விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார். அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த ஜூலை 31–ந் தேதி முதல் டெல்லிக்கு சென்று இதற்காக அங்கு முகாமிட்டுள்ளார். அங்கு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ‘நீட்’ தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

இந்த சந்திப்பின்போது டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; இந்த ஆண்டுக்கு மட்டுமாவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்பதாகவும், என்றாலும் நிரந்த விலக்கு என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீட் இந்தியா முழுவதற்குமான தேர்வு என்பதால், இதில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது எப்படி? என்பது பற்றி மத்திய அரசு யோசிப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.



Next Story