அ.தி.மு.க.வை பற்றி வெற்றிவேலுவுக்கு எதுவும் தெரியாது அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி


அ.தி.மு.க.வை பற்றி வெற்றிவேலுவுக்கு எதுவும் தெரியாது அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 3 Aug 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிவேல் கட்சியை பற்றி, கழகத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

வெற்றிவேல் எம்.எல்.ஏ.வின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

வெற்றிவேல் காங்கிரசில் இருந்து எங்கள் இயக்கத்துக்கு வந்தவர். கட்சியை பற்றி, கழகத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர். 1982-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்கிறோம். 8 முறை சிறைக்கு சென்று இருக்கிறோம். எங்களுக்கு கட்சியை கட்டி காப்பதற்கு உரிய உரிமை இருக்கிறது.

ஜெயலலிதாவின் ஆட்சியை தொடரவேண்டியது இருக்கிறது. எல்லாவித உரிமையையும் பெற்றவர்கள் நாங்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்து, அ.தி.மு.க.வில் காங்கிரஸ் கலாசாரத்தை புகுத்தவேண்டும் என்றால் அது ஒருபோதும் நடக்காத காரியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 4-ந் தேதிக்குள் 2 அணிகளும் இணையாவிட்டால் கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவோம் என்று டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?

பதில்:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் கருத்து சொல்லலாம். ஆனால் அது நடைபெறவேண்டும். எங்களை பொறுத்தவரை ‘ஏ’, ‘பி’ என்று யாரையும் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே அது இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பொறுப்பையே பொதுச்செயலாளர் சசிகலா தான் கொடுத்திருக்கிறார் என்று வெற்றிவேல் கூறி இருக்கிறாரே?

பதில்:- எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சேர்ந்துதான் முதல்-அமைச்சரை தேர்ந்து எடுத்தோமே தவிர, நீங்கள் சொல்வது போன்று யாரும் (சசிகலா) முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்கவில்லை.

இவ்வாறு ஜெயக்குமார் பதில் அளித்தார். 

Next Story