‘முரசொலி’ பவள விழா பொதுக்கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை


‘முரசொலி’ பவள விழா பொதுக்கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 3:15 AM IST (Updated: 3 Aug 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் 11-ந் தேதி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1942-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி தொடங்கப்பட்ட முரசொலி இதழின் 75-ம் ஆண்டு விழாவைக் குறிப்பிடும் வகையில் வருகிற 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் ‘முப்பெரும் விழா’ நடைபெற இருக்கிறது.

ஆகஸ்டு 10-ந் தேதி காலையில் முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கத்தின் திறப்பு விழாவிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். ‘இந்து’ குழுமத்தின் தலைவர் ‘இந்து’ என்.ராம் காட்சி அரங்கத்தைத் திறந்து வைக்கிறார்.

10-ந் தேதி மாலையில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி எண்ணத்தில் மலர்ந்த வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, சென்னை கலைவாணர் அரங்கில் ‘முரசொலி’ பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், கருணாநிதியால் ‘கலைஞானி’ எனப் பட்டம் சூட்டப்பெற்றவரும், கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களே தனது திரை வாழ்வுக்குப் பால பாடம் எனப் பெருமையுடன் சொல்பவரும், தமிழ்த் திரையுலகை உலக அளவில் உற்று நோக்கச் செய்தவருமான கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

திரைத்துறையிலும் இலக்கியத்திலும் தன் படைப்புத் திறமையால் எண்ணற்ற விருதுகளைக் குவித்து, இளைய சமுதாயத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் கவிப்பேரரசு வைரமுத்துவும் வாழ்த்துரை வழங்குகிறார்.

கருணாநிதியிடம் அரசியல் தலைவர் என்பதையும் கடந்து மூத்த பத்திரிகையாளர் என்ற தோழமையுடன் பழகும் தமிழ் இதழ் உலகின் முன்னோடி பத்திரிகையாளர்களான ‘இந்து’ என்.ராம், ‘தினத்தந்தி’ குழும அதிபர் சி.பாலசுப்ரமணியன் ஆதித்தன், ‘ஆனந்தவிகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவர் மனோஜ்குமார் சந்தாலியா, ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், ‘டெக்கான் கிரானிக்கள்’ ஆசிரியர் பகவான் சிங், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆசிரியர் அருண்ராம், ‘தினகரன்’ செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

‘முரசொலி’ நிர்வாக மேலாண்மை இயக்குநரான உதயநிதி ஸ்டாலின் நன்றியுரை ஆற்றுகிறார். வாழ்த்தரங்க நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபு செய்து வருகிறார்.

ஆகஸ்டு 11-ந் தேதி மாலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் சிறப்பான முறையிலே நடைபெறவிருக்கிறது.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை வகிக்க, முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றுகிறார். ‘முரசொலி’ பவள விழா மலரை பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட, முரசொலியின் முதல் மேலாளராகப் பணியாற்றிய சி.டி.தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொள்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, அகில இந்திய பார்வார்டு ப்ளாக் மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வார்டு ப்ளாக் அமைப்பின் பி.என்.அம்மாவாசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இன்று உடல்நலன் குன்றியிருக்கும் கருணாநிதியால் தனது மூத்த பிள்ளையின் பவள விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவரது மனம் அந்த விழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும். கருணாநிதியின் மூத்த பிள்ளைக்கு கொண்டாடப்படும் கோலாகல பவளவிழாவில், அதன் இளைய சகோதரனாக நான் முன்னின்று அன்புடன் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story