அடுத்து நடக்கப்போவது என்ன? டி.டி.வி. தினகரன் விதித்த ‘கெடு’ இன்று முடிகிறது


அடுத்து நடக்கப்போவது என்ன? டி.டி.வி. தினகரன் விதித்த ‘கெடு’ இன்று முடிகிறது
x
தினத்தந்தி 4 Aug 2017 5:15 AM IST (Updated: 4 Aug 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

சென்னை,

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் ‘கெடு’ இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 2 அணிகள் இணைவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது.

அ.தி.மு.க.வில் பிளவுபட்டு நிற்கும் 2 அணிகள் இணைவதற்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 60 நாள் ‘கெடு’ விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

 ஆனாலும், 2 அணிகள் இணைவது தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படவே இல்லை.

மாறாக, எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் எதிர்... எதிர்... துருவங்களாக நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அம்புகளை எய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வமும் தமிழக அரசை ஊழல் அரசு என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், 2 அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் கட்சிப் பணியில் இறங்க ஆயத்தமாகிவிட்டார். இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘‘தீவிர கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன். வரும் 5–ந் தேதி (நாளை) கட்சி அலுவலகம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றும் கூறியிருந்தார்.

இந்த தகவல் வெளியானதும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது அணியினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அதில், டி.டி.வி. தினகரனை கட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்றும், தடையை மீறி உள்ளே நுழைய முயன்றால் கைது நடவடிக்கையில் இறங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால், டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை (சனிக்கிழமை) கட்சி அலுவலகத்துக்கு வரும் பட்சத்தில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.

ஆனால், நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘‘5–ந் தேதி கட்சி அலுவலகத்துக்கு போவேன் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. அங்கு செல்லும்போது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுத்தான் செல்வேன்’’ என்று தடாலடியாக மாற்றிக் கூறினார்.

எனவே, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்லும் திட்டத்தை டி.டி.வி.தினகரன் கைவிட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. இருந்தாலும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்தால், அவர்களை தடுத்து நிறுத்தவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகவே இருக்கின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட இருக்கிறது.

தற்போது, டி.டி.வி.தினகரனுக்கு கட்சியில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. அவரது பின்னால், 7 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். சென்னையில் வி.பி.கலைராஜன், பி.வெற்றிவேல் ஆகிய 2 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். சொல்லிக்கொள்ளும்படி கட்சியில் ஆதரவு இல்லாததால், கட்சி அலுவலகத்துக்கு வரும் திட்டத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

சரிவில் இருந்து மீள டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். முன்னதாக, இதுகுறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்த அவர், நேற்று மாலையே சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த கட்டமாக, என்னென்ன செய்யலாம்? என்று கருத்துக் கேட்டார்.

இப்படி, அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக பிளவுபட்டு நிற்பதால், கட்சியில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற பரபரப்பு கட்சி தொண்டர்களையும் தாண்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Next Story