சுப்பையா என் வீட்டு சமையல்காரர் அல்ல, சப்–காண்டிராக்டர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


சுப்பையா என் வீட்டு சமையல்காரர் அல்ல, சப்–காண்டிராக்டர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2017 3:00 AM IST (Updated: 4 Aug 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் 120 கல் குவாரிகள் செயல்படுகிறது. இதில் என்னுடைய கல் குவாரியும் இருக்கிறது.

சென்னை,

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுக்கோட்டையில் 120 கல் குவாரிகள் செயல்படுகிறது. இதில் என்னுடைய கல் குவாரியும் இருக்கிறது. என்னுடைய கல்குவாரியில் சுப்பையா என்பவர் சப்–காண்டிராக்டராக இருக்கிறார். அவரை என் வீட்டு சமையல்காரர் என்று கூறுவதே தவறு. அவர் ஒரு தொழிலதிபர். தன்னுடைய தொழிலுக்கு முறையாக வருமானவரி கட்டி வருபவர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது இது போன்று தவறான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். உரிய அனுமதி பெற்று, சட்டத்திற்கு உட்பட்டு தான் என்னுடைய குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் எந்த விதி மீறலும் நடக்கவில்லை.

பொதுவாழ்வில் துடிப்புடன் செயல்படும் என்னை போன்றவர்களுக்கு சங்கடங்கள் வருவது சகஜம் தான். இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். குட்கா விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பல முறை தெரிவித்து விட்டேன். சட்டசபையிலும் எதிர்கட்சித்தலைவருக்கு சரியான முறையில் பதில் அளித்து இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சரியான முறையில் விளக்கம் அளித்து இருக்கிறேன். எல்லாவற்றையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து காட்டுவேன். அந்த வகையில் என் தரப்பு விளக்கத்தை தெளிவாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story