காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2017 5:45 AM IST (Updated: 4 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்பது பற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் தரப்பிலான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பிலான இறுதி வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.

சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில், நதிநீர் பங்கீடு தொடர்பாக நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள பங்கீடு முறையாக செய்யப்படுகின்றதா? என்று கண்காணிக்கவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த மேலாண்மை வாரியத்தில் யார்-யார் பங்கேற்க வேண்டும் அல்லது நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டு அத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருபுறம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒருபுறம் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதி காக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதி தீபக் மிஸ்ரா, நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்பது பற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மத்திய அரசு தனது தரப்பிலான வாதங்களை முன்வைக்கும்போது, இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்காததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று கூறினார்.

சேகர் நாப்டே தொடர்ந்து வாதாடுகையில் கூறியதாவது:-

கர்நாடகம் கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளை கட்டி உள்ளது. இவற்றுக்கான அனுமதியை அவர்கள் மத்திய அரசிடம் இருந்தோ கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்திடம் இருந்தோ பெறவில்லை. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து போனது.

2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு 2013-ம் ஆண்டு வரை அரசிதழில் வெளியிடப்படவில்லை. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு 2014-ம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க எந்த மாநிலத்துக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் கர்நாடக அரசு நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எந்த வகையிலும் மதிப்பு அளிக்கவில்லை.

1924-ம் ஆண்டில் மைசூர் மாகாணம் மற்றும் சென்னை மாகாணங்களுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் 1964-ல் காலாவதியானதாக கர்நாடக தரப்பில் பாலி நாரிமன் வாதங்களை முன்வைத்தார். இது வாதத்துக்கு உரியதாகும். இந்த வாதத்துக்கு எதிராக தமிழக அரசின் விரிவான பதிலை எங்கள் வாதத்தின் போது விரைவில் முன்வைக்கிறேன்.

தமிழகத்தில் தண்ணீர் உபயோகப்படுத்துவது குறித்து கர்நாடக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் மிகவும் தவறானவை. தமிழகத்தின் நலனுக்கு எதிராக கர்நாடக மாநிலம் செயல்பட்டு வருவது குறித்து நாங்கள் விரிவாக விளக்கி இருக்கிறோம். கர்நாடக மாநிலத்தின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு தேவையின் அடிப்படையில் பெறவேண்டிய நீரின் அளவு குறைக்கப்படுகிறது.

தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து பெறும் தண்ணீர் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கர்நாடகத்தின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை சீனப் பெருஞ்சுவராக இடையில் நின்று கர்நாடகம் தடுப்பதாக தமிழக அரசு தரப்பில் புகார் தெரிவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்து என்ன என்பதை சொலிசிட்டர் ஜெனரல் தன்னுடைய வாதத்தின் போது விளக்க வேண்டும் என்று கூறினார்.

சேகர் நாப்டே தொடர்ந்து கூறியதாவது:-

எல்லாவற்றுக்கும் நாங்கள் உரக்க கூச்சலிடுகிறோம் என்று கர்நாடக தரப்பில் கூறுகிறார்கள். நாங்கள் உண்மையைத்தான் உரக்கக் கூறுகிறோம். அது அவர்களுக்கு கூச்சலாக கேட்கிறது.

தமிழகத்துக்கு சாதகமாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த உத்தரவு எந்த வகையிலும் நிறைவேற்றப்படுவது இல்லை. அந்த உத்தரவு பற்றி கர்நாடக மாநிலம் கவலைப்படுவது இல்லை. மாறாக அந்த மாநிலத்தின் மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தெருவில் நின்று போராடுகிறார்கள். மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இயற்கையும் எங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை. நிலப்பரப்பு மலைப்பாங்காக இருக்கும் இடத்தில் அணைகளை கட்டி நீரைத் தேக்குவது எளிதாகும். மேட்டில் இருந்து தண்ணீர் பள்ளத்தை நோக்கிப் பாய்கிறது. தமிழகத்தின் நிலப்பரப்பு தட்டையாக இருப்பதால் தண்ணீர் வேகமாகப் பாய்வது இல்லை. தட்டையான நிலப்பரப்பில் அணைகளை கட்டுவது கடினமானது. இதனை தனக்கு சாதகமாக்கி கர்நாடகம் சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்கிறது. அவர்களுக்கு சாதகமாக அனைத்தையும் வளைத்துக்கொள்கின்றனர்.

தமிழக பாசனங்களுக்காக நீர் தேவையை மழை முழுமையாக பூர்த்தி செய்வது இல்லை. தமிழ்நாடு தென்மேற்கு பருவமழையை முழுமையாக நம்பி உள்ளது. வடகிழக்கு பருவமழையை பாசனத்துக்கு ஏற்றதாக முழுமையாக நம்பமுடியாது.

மழை பெய்தால் மட்டும் போதாது. அந்த மழை பயனுள்ளதாக அமைய வேண்டும். பயிர்கள் மழை நீரை நம்பி உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் விடாமல் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக பொழிந்தால் பயிர்கள் அழுகிப் போகும் ஆபத்து உள்ளது. அதேபோல் போதிய மழை பொழியாமல் இருந்தால் பயிர்கள் வாடி கருகிப்போகும் ஆபத்தும் உள்ளது.

வடமேற்கு பருவமழையின் போது பல சமயங்களில் புயலும் தாக்குகிறது. இது தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காவிரியில் இருந்து பெறும் தண்ணீரைத்தான் தமிழகம் பெரிதும் நம்பி இருக்கிறது.

இவ்வாறு சேகர் நாப்டே தன்னுடைய வாதத்தின் போது கூறினார்.

அவர் தனது வாதத்தின் போது தமிழகத்தின் நீர்ப்பாசன வரலாறு குறித்து விரிவாக விளக்கினார்.

நேற்று விசாரணை முடிந்ததும், தமிழக அரசு தரப்பு வாதங்கள் வருகிற 16-ந்தேதி தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story