சென்னையில் நாளை மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் திருநாவுக்கரசர் பங்கேற்பு


சென்னையில் நாளை மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் திருநாவுக்கரசர் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 1:30 AM IST (Updated: 4 Aug 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் நாளை (சனிக் கிழமை) மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் நாளை (சனிக் கிழமை) மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சு.திருநாவுக்கரசர் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மானிய விலையில் சிலிண்டரை பயன்படுத்தி வருகிற 18.11 கோடி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக இதை கருத வேண்டியிருக்கிறது.

இன்று உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலனை அனுபவிக்க சில விதிமுறைகளை மாநில அரசு வகுத்திருக்கிறது. இதன்படி தினக் கூலிகளாக வேலை செய்பவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயன்களை பெற முடியாத வகையில் விதிமுறைகள் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவதைவிட மக்களை கொடுமைப்படுத்துகிற நடவடிக்கை வேறு இருக்க முடியாது.

எனவே, பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தீவிர பிரசாரம் செய்து உண்மையை உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டிருக்கிற அரசாணை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஆணையை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது.

இத்தகைய மக்கள் விரோத மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் 5-ந் தேதி (நாளை) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை வகிக்கிறார். நான் இந்த ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து கண்டன பேருரை ஆற்றுகிறேன்.

மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆகஸ்டு 7-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story