ஆசிரியர் படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு எப்போது பணி வழங்கப்படும்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


ஆசிரியர் படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு எப்போது பணி வழங்கப்படும்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 5 Aug 2017 2:45 AM IST (Updated: 4 Aug 2017 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பட்டபடிப்பை நிறைவு செய்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகளில் பணி வழங்கப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இளங்கலை கல்வியியல் படிப்பில் கூடுதல் மாணவர்களை சேர்ப்பதற்கும், புதிதாக முதுகலை கல்வியியல் படிப்பை தொடங்குவதற்கும் அனுமதி வழங்க மறுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து அந்த கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மனுதாரர் கல்லூரிக்கு எதிராக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் இயக்குனர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன். மனுதாரர் கல்லூரியை 2 வாரத்தில் ஆய்வு நடத்தி உரிய உத்தரவுகளை கவுன்சில் பிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்ளன? அவற்றில் பயிலும் ஆசிரிய பட்டதாரிகளின் தற்போதைய நிலை என்ன? எத்தனை பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது? என்பது உள்பட பல கேள்விகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு இருந்தேன். அதற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாடு ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘2015–18–ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 4 லட்சம் ஆசிரிய பட்டதாரிகள் படிப்பை நிறைவு செய்வார்கள்’ என்று கூறியுள்ளது. அவர்கள் படிப்பை நிறைவு செய்யும்போது அவர்களில் எத்தனை பேருக்கு, எத்தனை ஆண்டுகளில் தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்கும்? குறைந்தது 5 ஆண்டுகளுக்குள் வேலை வழங்கிவிடுமா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும்? எத்தனை பேருக்கு வேலை வழங்க முடியும்? என்பது குறித்து விரிவான விளக்கத்தை ஆண்டுவாரியாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை 10–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story