மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தமிழக அரசு மனு


மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தமிழக அரசு மனு
x
தினத்தந்தி 5 Aug 2017 5:45 AM IST (Updated: 5 Aug 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்துள்ளது.



மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.

புதுடெல்லி, ஆக.5-

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

தமிழக அரசு மேல்முறையீடு

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து ஜூலை 31-ந் தேதி உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் வக்கீல் கே.வி.விஜயகுமார் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உரிமையை மறுக்கும் செயல்

மாநில பாட திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது மாநில அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கை ஆகும். இதுபோன்ற மாநில அரசின் நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிடுவது அடிப்படை உரிமையை மறுக் கும் செயலாகும். மேலும் மாநில அரசின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் ஐகோர்ட்டு தலையிட முடியாது.

தமிழக அரசின் இந்த அரசாணை அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்து உள்ளது. எந்த வகையிலும் இது யாருடைய உரிமையையும் மீறும் வகையில் வெளியிடப்படவில்லை.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான மாநில அரசின் பாட திட்டம் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது. எனவே, மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே, மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சேர முடியாத நிலை

சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுடன் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமன்படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பயிலும் மாணவர்கள் 10 சதவீத பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த அரசாணையில் உள்ள இட ஒதுக்கீட்டை மாநில பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கவில்லை என்றால், மாநில ஒதுக்கீட்டில் நிரப்ப வேண்டிய மருத்துவ கல்லூரி இடங்கள், மாநிலத்தில் குறைந்த சதவீதத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பயின்ற மாணவர்களால் மட்டுமே பெருவாரியாக நிரப்பப்படும். இதனால் மாநில பாடதிட்டத்தில் பயின்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேரமுடியாத நிலை ஏற்படும்.

மாநில அரசின் கடமை

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புக்காக நுழைவுத்தேர்வுகள் எதுவும் நடைபெற்றது இல்லை. 90 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் மாநில பாட திட்டத்திலேயே பாடம் பயில்கிறார்கள். அவர் களுக்கான பாட திட்டங்கள், பாட புத்தகங்கள் மற்றும் பயிற்றுவிக்கும் முறை ஆகியவை சி.பி.எஸ்.இ. பாட திட்டத்துக்கு முற்றிலும் மாறுபட்டு உள்ளது.

தற்போது ஐகோர்ட்டு விதித்துள்ள தடையால் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை மற்றும் கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மாநில பாட திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் உள்ள வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு இந்த தடையை விதித்து இருக் கிறது. இரு பாடதிட்டங்களிலும் பயின்ற மாணவர்களை சமமாக கருதி சேர்க்கையை நடத்துவது சரியானதாக இருக்காது. மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் வாய்ப்பை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை ஆகும். மாநில அரசின் இந்த கடமைக்கு எதிராக அமைந்துள்ளது ஐகோர்ட்டின் தீர்ப்பு.

ரத்து செய்ய வேண்டும்

எனவே, மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வகையில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story