சேர்ந்து வாழ மறுத்த மனைவி கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்


சேர்ந்து வாழ மறுத்த மனைவி கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 Aug 2017 3:15 AM IST (Updated: 5 Aug 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைதான கணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள விநாயகபுரம் திருமால்நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தயாநிதி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சத்யபாமா. இவர், கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகள் சிந்துஜா (வயது 27).

இவருக்கும், சென்னை போரூர் கெருகம்பாக்கம் லீலாவதி நகரைச் சேர்ந்த தேவநீதி (31) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவநீதி, போரூரில் உள்ள தனியார் தோல் கம்பெனியில் மேலாளராக உள்ளார்.

திருமணத்தின்போது சிந்துஜாவின் பெற்றோர் நகை, பணம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் வரதட்சணையாக பணம் கேட்டு சிந்துஜாவை தேவநீதி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் சிந்துஜா, கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். தேவநீதியின் உறவினர்கள் பலமுறை குடும்பம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தும் சிந்துஜா வரமறுத்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிந்துஜாவின் தந்தை தயாநிதி, 2 வக்கீல்களுடன் கெருகம்பாக்கத்தில் உள்ள தேவநீதி வீட்டுக்கு சென்று திருமணத்தின் போது தாங்கள் கொடுத்த சீர்வரிசை பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டார்.

இதை அறிந்த தேவநீதி ஆத்திரம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சிந்துஜா வீட்டுக்கு வந்தார். தனது மனைவியுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறி சிந்துஜாவின் பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டினார்.

தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி தேவநீதி கூறினார். அதற்கு சிந்துஜா மறுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேவநீதி, மனைவியை தீ வைத்து கொளுத்துவதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார்.

கியாஸ் வாசனை வந்ததால் விபரீதம் நடக்க போவதை உணர்ந்த சிந்துஜாவின் பெற்றோர், ஜன்னலை உடைத்து பார்த்தனர். அங்கு தங்கள் மகளை, தேவநீதி தீ வைத்து கொளுத்த முயல்வதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கியாஸ் சிலிண்டரை அணைத்தனர்.

அதற்குள் தேவநீதி, சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவி சிந்துஜாவின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தங்கள் ஒரே மகள் கொலையானதை கண்டு சிந்துஜாவின் பெற்றோர் கதறி அழுதனர்.

அப்போது தேவநீதியின் கையில் கத்தி கிழித்ததால் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அவர், படுக்கை அறைக்கு சென்று மெத்தையில் தீ வைத்துவிட்டு வெளியே ஓடி வந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். மெத்தையில் எரிந்த தீயை தண்ணீர் விட்டு அணைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், கொலையான சிந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேவநீதியை கைது செய்த போலீசார், அவரது கையில் ஏற்பட்ட காயத்துக்காக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்போது போலீசாரிடம், தேவநீதி பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். வாக்குமூலத்தில் அவர், கூறி இருப்பதாவது:-

என்னுடன் ஏற்பட்ட தகராறில் எனது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். பலமுறை அவளை குடும்பம் நடத்த வரும்படி உறவினர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் எனது மாமனார், மாமியார் அவளை என்னுடன் அனுப்ப மறுத்து விட்டனர்.

சிந்துஜாவும் என்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாள். எனது வீட்டுக்கு வந்த மாமனார், சீர்வரிசை பொருட்களை லாரியில் ஏற்றி சென்றுவிட்டார். இதனால் எனது மனைவியுடன் சேரும் கடைசி வாய்ப்பும் நழுவிவிட்டதாக நினைத்தேன். கடைசியாக சிந்துஜாவை சந்தித்து என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி வற்புறுத்தினேன். அவள் மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story