தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 ஏ தேர்வை 5½ லட்சம் பேர் எழுதினர்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 ஏ தேர்வை 5½ லட்சம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 7 Aug 2017 5:15 AM IST (Updated: 7 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–2 ஏ தேர்வை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள 1,953 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப குரூப்–2 ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. குரூப்–2 தேர்வுக்கு முதல் நிலை தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதவேண்டும். அதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கு ஏற்பார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள்.

ஆனால் குரூப்–2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு மட்டும் இல்லாதது. அறிவிக்கப்பட்ட குரூப்–2 ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 57 ஆயிரத்து 359 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் பட்டதாரிகள். அவர்களில் பெரும்பாலானோர் என்ஜினீயரிங் படித்தவர்கள். விண்ணப்பித்தோரில் 4 ஆயிரத்து 443 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. 7 லட்சத்து 52 ஆயிரத்து 916 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் குரூப்–2 ஏ தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது.

2 ஆயிரத்து 536 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பதற்றமான 31 மையங்கள் என்று முடிவு செய்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

சென்னையில் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி.மேல்நிலைப்பள்ளி, அரசு காயிதே மில்லத் கல்லூரி உள்பட 259 மையங்களில் தேர்வு நடந்தது. இத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுதிய சிலர் கூறுகையில், ‘‘தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. மொழித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் இருந்தது. மொழித்தேர்வில் பலரும் தமிழை தேர்ந்து எடுத்திருந்தனர். தமிழில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் பொது அறிவில் உள்ள கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன’’ என்று தெரிவித்தனர்.

இந்த தேர்வில் பொது அறிவு கேள்வி பகுதியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக, மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டா? என்று கேட்கப்பட்டு அதற்கான விடைகளாக 1.ஆம், 2. இல்லை, 3.பரிந்துரைக்க மட்டுமே முடியும், 4. ஜனாதிபதியால் மட்டுமே கலைக்க முடியும் என 4 விதமான பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.


Next Story