நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடை அணியுங்கள்


நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடை அணியுங்கள்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர வாரம் ஒரு நாள் கைத்தறி ஆடை அணியுங்கள் என்று பொதுமக்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள தேசிய கைத்தறி தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–

1905–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7–ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழில் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்திடவும் ஆகஸ்டு 7–ம் நாள் (இன்று) தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க கைத்தறித் தொழிலின் வளர்ச்சிக்காக அண்ணா தனது தோளிலும், தலையிலும் சுமந்து கைத்தறி ஆடைகளை விற்று நெசவாளர்களுக்கு வாழ்வளித்ததைப் போல், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15–ந் தேதி முதல் ஜனவரி 31–ந் தேதி வரையிலான 139 நாட்களுக்கு கைத்தறித் துணி விற்பனைக்கு 30 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், 1.64 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 54 லட்சம் மாணவ–மாணவியருக்கு ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்கள் ஆயுள் காப்பீடு திட்டம், கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம், நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கும், 3.20 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உப தொழில் புரிவோருக்கும் இத்தொழில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் முழு முனைப்போடு அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தொடர்ந்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரிவு மக்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள், கோ–ஆப்டெக்ஸ் மற்றும் லூம்வேர்ல்ட் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பட்டு மற்றும் கைத்தறி ஆடைகளை வாங்கி, வாரத்திற்கு ஒருநாள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை உடுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story