சேகர் ரெட்டியுடன் தொடர்பா? வழக்கு போட்டால் சந்திக்க தயார்- ஓ.பன்னீர் செல்வம்


சேகர் ரெட்டியுடன் தொடர்பா? வழக்கு போட்டால் சந்திக்க தயார்- ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 7 Aug 2017 12:13 PM IST (Updated: 7 Aug 2017 12:13 PM IST)
t-max-icont-min-icon

சேகர் ரெட்டியுடன் தொடர்பா? வழக்கு போட்டால் சந்திக்க தயார் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில் அதிபர் சேகர் ரெட்டியுடன்  தொடர்பு வைத்த ஓ.பி.எஸ்.க்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.

சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த நேரத்திலும் தொடர்பு இருந்தது இல்லை. புரட்சித்தலைவி அம்மா வழக்கில் இருந்து விடுதலை பெற திருப்பதி சென்று வழிபாடு செய்தேன். அப்போது  திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் சேகர் ரெட்டி அங்கு வந்தார்.  

நான் கோவிலை விட்டு வெளியே வரும்போது  என்னுடன் அவரும் வந்தார்.  இதை  சிலர் புகைப் படம் எடுத்தனர். அதை வைத்துக் கொண்டு எனக்கும் சேகர்ரெட்டிக்கும் தொடர்பு என்கிறார்கள். ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தது என் தவறா?

மற்றபடி  எனக்கும்  தொழில் அதிபர்  சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அமைச்சர் சட்ட துறையை கையில் வைத்துள்ளார். ஆட்சி, அதிகாரம் இப்போது அவர்களிடம் தானே உள்ளது. விசாரித்து உண்மையை அறியட்டும். இல்லையெனில் என் மீது வழக்கு தொடரட்டும்.  இது தொடர்பாக வழக்கு  தொடர்ந்தால் விசாரணையை சந்திக்க  தயாராக இருக்கிறேன். எனக்கு மடியில் கனம் இல்லை. எனவே பயம் இல்லை. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

Next Story