விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை விஜயபாஸ்கர்


விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை  விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 8 Aug 2017 6:54 PM IST (Updated: 8 Aug 2017 6:54 PM IST)
t-max-icont-min-icon

அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சென்னை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தின விழா 15–ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், மேலும் 2 அரசு விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

இதனால் 11–ந் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.
இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு தெள்ளத்தெளிவாக இடம் பெற்றுள்ளது. இதனால்  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ன அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்க 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 980 சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன.  4 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டர் கோரியுள்ள 2000 புதிய பேருந்துகள் வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story