‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி சென்னையில், ம.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு
சென்னையில் நாளை (வியாழக்கிழமை) ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்து உள்ளார்.
சென்னை,
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி சென்னையில் நாளை (வியாழக்கிழமை) ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்து உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘நீட்’ நுழைவு தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை–எளிய, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவராகும் கனவை மத்திய அரசு தகர்த்து எறிந்துவிட்டது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் ‘இந்துத்துவா’ கொள்கையை இந்தியா முழுவதும் அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பதற்கு பா.ஜ.க. அரசு செயலாற்றி வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு, ஒரே பொது நுழைவு தேர்வு நடத்துவதன் மூலம் சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கி இருக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை ரத்து செய்யக்கோரியும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், மருத்துவ கல்விக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை திணித்து சமூக நீதியை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story