விவாத அரங்கிற்கு செங்கோட்டையன் வர வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. ஏற்பாடு செய்துள்ள விவாத அரங்கிற்கு அமைச்சர் செங்கோட்டையன் வர வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தன்னுடன் விவாதம் நடத்தத்தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் எனக்கு சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன்.
பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பா.ம.க.வுக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே டாக்டர் ராமதாஸ் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்விமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பா.ம.க., அதில் 24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது.
அதுமட்டுமின்றி பள்ளிக்கல்வி, இன்றையத் தேவைக்கேற்ற கல்விமுறை என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.
ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைசரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அ.தி.மு.க. தான்.
அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு வரும் 12–ந் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும்.
செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story