26 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு


26 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

சென்னை,

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 26 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.

டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மாதமும், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் விற்பனை அதிகமாக இருந்தால் அதில் 1½ சதவீதத்தை எடுத்து சிறப்பாக விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு 70 சதவீதமும், குறிப்பிட்ட அந்த இலக்கை எட்ட முடியாத கடைகளுக்கு மீதமுள்ள 30 சதவீதத்தில் இருந்தும் ஊக்கத்தொகை பிரித்து வழங்கப்பட்டு வந்தது.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் 37 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான ஊக்கத்தொகையும், மீதமுள்ள 63 சதவீதம் கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரையிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத்தொகை முறையில் முரண்பாடு இருக்கிறது என்று கூறி, அந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் 184-வது கூட்டம் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்தது. அதில் இதுதொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், அந்தந்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான அறிவிப்பை மானியக்கோரிக்கையின்போது சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டார். அதன்படி, இந்த ஊதிய உயர்வானது செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முடிவு கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்ற டாஸ்மாக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.7 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 500 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஆயிரம் கண்காணிப்பாளர்களும், 14 ஆயிரத்து 500 விற்பனையாளர்களும், 4 ஆயிரத்து 500 உதவி விற்பனையாளர்களும் என மொத்தம் 26 ஆயிரம் பேர் பயன் அடைய உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் டி.தனசேகரன் கூறியதாவது:-

ஊக்கத்தொகை முறையை ரத்து செய்து, சம்பளத்துடன் கூடிய தொகுப்பு ஊதியம் வழங்கும் முறையை வரவேற்கிறோம். ஆனால் இதிலும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. அதை அரசு உடனே களைய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தீர்ப்பு அளித்தது. அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story