டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம்


டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம்
x
தினத்தந்தி 10 Aug 2017 5:30 AM IST (Updated: 10 Aug 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்க புதிய வியூகம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க. (அம்மா) தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா), ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என அ.தி.மு.க. இரு துருவங்களாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார். கட்சியை வழி நடத்த துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை அறிவித்து விட்டு சசிகலா சிறை சென்ற பிறகு, அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் சலசலப்பு உருவானது.

“இரு அணிகளின் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக நீங்கள் தான் இருக்கிறீர்கள்” என்று அமைச்சர்கள் குற்றம் சாட்டியதால், அணிகளின் இணைப்புக்காக ‘கெடு’ நிர்ணயித்து டி.டி.வி. தினகரன் காத்திருந்த வேளையில் கட்சியும், ஆட்சியும் ஒரு சேர எடப்பாடி பழனிசாமி கைக்குள் வந்து சேர்ந்தது. அமைச்சர்களில் சிலரும், எம்.எல்.ஏ.க்களில் பலரும் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஆதரிக்க தொடங்கினர். இந்த மாற்றத்தை டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆகஸ்டு 5-ந்தேதியுடன் ‘கெடு’வை முடிந்ததால் டி.டி.வி. தினகரன், தன்னுடைய சுற்றுப்பயண விவரத்தையும், அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சி அலுவலகத்திற்கு டி.டி.வி. தினகரன் செல்ல முடியாத அளவுக்கு தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலப்படுத்தினர்.

இதன் மூலம் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. தினகரன் கொடுத்த பதவியை சில எம்.எல்.ஏ.க்கள் ஏற்றும், சில எம்.எல்.ஏ.க்கள் மறுத்தும் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வசம் இருப்பதால், டி.டி.வி. தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, கட்சியிலும், ஆட்சியிலும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்கும் வகையில் புதிய வியூகம் வகுப்பது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கட்சி சம்பந்தமாக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, ‘டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தங்களுக்கும் (டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் யாராவது எம்.எல்.ஏ. பதவியை இழக்க விரும்புவார்களா?. ஆட்சி கலைப்பு என்ற விஷயத்திற்குள் அவர்கள் செல்லவே மாட்டார்கள். கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நடக்கும்’ என்றனர்.

Next Story