‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தடையை மீறி இன்று போராட்டம் வைகோ அறிவிப்பு


‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தடையை மீறி இன்று போராட்டம் வைகோ அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2017 2:15 AM IST (Updated: 10 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தடையை மீறி இன்று (வியாழக் கிழமை) போராட்டம் நடத்துவோம் என்று வைகோ தெரிவித்தார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி மேல்-சபைக்கு குஜராத்தில் இருந்து 3 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத், காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலின் வெற்றியை தடுக்க பா.ஜ.க.வினர் பல்வேறு திட்டங்களை தீட்டினார்கள்.

பா.ஜ.க. இந்த தேர்தலுக்காக பணம், பதவி ஆசை காட்டி சிலரை அணி மாறவும் வைத்தனர். இருப்பினும் நீதி வென்று இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுவிட்டார். தேர்தல் ஆணையம் நியாயத்தின் பக்கம் நின்றது. இதனால் அரசியல் நேர்மை பற்றி பேச மோடிக்கு இனிமேல் தகுதி கிடையாது.

இப்போது அவர்கள் கவனம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டை பருந்து பார்வையில் பார்க்கிறார்கள். அருணாசலபிரதேசம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் செய்த வேலை இங்கு நடக்காது.

டெல்டா மாவட்டங்களில் 110 கிணறுகளை ஓ.என்.ஜி.சி. மூலம் தோண்ட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இவர்கள் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுப்பதற்காக தான் கிணறு அமைக்கிறோம் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் பொய். இதேபோல், நெடுவாசலிலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக போராட்டமும் நடைபெற்று வருகிறது.

என்ன போராட்டம் நடத்தினாலும் நாங்கள் செய்வதை செய்வோம் என்று திட்டவட்டமாக இருக்கிறார்கள். இந்த கனிம வளங்களை எடுப்பதினால் இந்தியாவுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு அழிந்து போகும். இதை தடுக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசு பாசிச அரசாக மாறி வருகிறது.

இதை தடுக்க நான் கட்சி அடையாளம் இன்றி பொதுமக்களையும், மாணவர்களையும் திரட்டுவேன். கனிம வளங்களை எடுக்கும் நிறுவனத்தின் எந்திரங்களை இயங்கவிடமாட்டேன்.

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி ம.தி.மு.க. சார்பில் நாளை(இன்று) போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அதற்கு போலீஸ் அனுமதி தந்தது. ஆனால் தற்போது சுதந்திர தினவிழா இருப்பதால் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் கூறி இருக்கிறது.

அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம். முதலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். அடக்கு முறையை தற்போது மாநில அரசு கையாளுவதால் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story