கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்கும் நீரின் அளவு குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்கும் நீரின் அளவு குறைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2017 3:57 AM IST (Updated: 10 Aug 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூரு,

காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா, விவசாயத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, முன்னாள் மந்திரி அம்பரீஷ் மற்றும் மண்டியா மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கர்நாடகத்தில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாட்டிற்கு தற்போது தண்ணீர் திறந்துவிடும் அளவு, வரும் நாட்களில் எவ்வளவு தண்ணீரை திறந்துவிடுவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் இருந்தும் நாளை(அதாவது இன்று) முதல் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு எந்த அளவுக்கு தண்ணீர் விட வேண்டும் என்பதை காவிரி படுகை அணைகளின் நீர்ப்பாசன ஆலோசனை குழு கூடி முடிவு எடுக்கும். 11 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் ஏரிகளில் நிரப்ப வேண்டியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு பயிர் செய்யக்கூடாது. அதற்கு போதுமான அளவு அணைகளில் தண்ணீர் இல்லை. எக்காரணம் கொண்டும் இந்த விஷயத்தில் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.

அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆயிரம் அடி ஆழ்துளை கிணறு தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பது அரசின் நோக்கம் அல்ல. விவசாயிகளை பாதுகாப்பது எங்களின் கடமை. அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

அதனால் தான் அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க முடிவு செய்துள்ளோம். நடப்பு ஆண்டில் பருவமழை இதுவரை சரியாக பெய்யவில்லை. அதிகளவுக்கு மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மழை குறைவாக பெய்தது இல்லை. கர்நாடகத்தில் கடந்த ஆண்டும் வறட்சி தீவிரமாக இருந்தது. ஆனால் இந்த அளவுக்கு மழை குறைவாக பெய்யவில்லை.

கடந்த ஆண்டு இதே நாளில்(நேற்று) காவிரியில் உள்ள 4 அணைகளிலும் 53.52 டி.எம்.சி. நீர் இருந்தது. இன்று(நேற்று) 45 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்தும் கடந்த ஆண்டை விட இப்போது குறைவாக இருக்கிறது. காவிரி படுகையில் மழையும் பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு கீழ் உள்ள பகுதியிலும் மழை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் தான் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் நாங்கள் சற்று தயக்கம் காட்டினோம். அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டவுடன் விவசாயிகள் நெல் நாற்று நடும் பணியை தொடங்கிவிடுகிறார்கள். அதன் பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்கள் நஷ்டத்தை அனுபவிப்பார்கள். இதுபற்றி அரசு சற்று ஆலோசித்தது. கடந்த முறை விவசாயிகளுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. மேலும் நெல் விளையும் நிலப்பரப்பு 2.68 லட்சம் ஏக்கராக அதிகரித்து உள்ளது.

நெல், கரும்புக்கு பதிலாக மழையை அடிப்படையாக கொண்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும். எந்த பயிர் சாகுபடியையும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. தண்ணீர் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் முக்கியமாக நெல் பயிரிட வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளோம். வரும் நாட்களில் மழை பெய்தால் மேலும் தண்ணீரை கொடுப்போம்.

செயற்கை மழை பெய்விக்கும் திட்ட பணிகளையும் விரைவில் தொடங்க உள்ளோம். எங்களிடம் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு எப்படி தண்ணீரை திறந்துவிடுவது? இருந்தாலும் சிறிதளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டுள்ளோம். தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரின் அளவை குறைத்துவிட்டோம்”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story