தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 11 Aug 2017 12:15 AM IST (Updated: 10 Aug 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்த நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீரை சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள நேரிட்டதற்காக திராவிடக் கட்சி ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. இப்போது 37 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. இதனால் காவிரியில் வரும் நீரை சேமித்து வைத்திருந்து பயன்படுத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளதை மறுக்க முடியாது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கண்டு காவிரியில் வரும் நீரை முழுமையாக சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் நீர் மேலாண்மைக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைப்பதன் மூலம் நீர் ஆதாரங்கள் வலுப்படுத்தப்படுவதுடன், மணல் கொள்ளையும் தடுக்கப்படும்.

தமிழகத்திற்கு கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடிப் பெறுவதற்கும், அவ்வாறு பெற்ற நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் வசதியாக தமிழகத்தில் நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதற்காக தலைசிறந்த நீரியல் வல்லுனர் ஒருவரை ஆலோசகராக நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story