கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்ததற்கு இடைக்கால தடை


கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்ததற்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 10 Aug 2017 2:45 AM IST (Updated: 10 Aug 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக ஜூலை 18–ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், ‘மல்லையா விவகாரத்தில் பெற்ற முன் அனுபவத்தினால், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து உள்ளது’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல், ‘தேடப்படும் நபராக அறிவித்த உத்தரவின் நகலை கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்காதது சட்டவிரோதமானது’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு நகலை கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தன்னை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல கார்த்தி சிதம்பரம் மீதான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ரவி விஸ்வநாதன் உள்பட 4 பேரையும் தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி எம்.துரைசாமி நேற்று விசாரித்தார். பின்னர், கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேரை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story