தமிழகத்தில் உள்ள குழப்பத்துக்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழகத்தில் உள்ள குழப்பத்துக்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2017 12:45 AM IST (Updated: 10 Aug 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள குழப்பத்துக்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு விவகாரம் தமிழக மாணவர்களின் எதிர்கால கல்வியை நிர்ணயம் செய்யக்கூடியது. ஏழை, எளிய நடுத்தர மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். தமிழக அரசு பலமுறை முயற்சி செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட்டு மாணவர்களின் எதிர்கால கல்வியை மனதில் வைத்து ‘நீட்’ தேர்வுக்கு கட்டாயமாக விலக்கு அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஓரிரு நாளில் நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு, மலேரியா, வைரஸ் போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அவசர அவசியமாக உரிய நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுக்க வேண்டும். கொசு தொல்லையை போக்க வெளிநாடுகளில் செய்யப்படும் நடவடிக்கைகளை தமிழக அரசு அறிந்து செயல்படுத்தவேண்டும்.

ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு உட்பட்ட கட்சியினரும் கருத்து வேறுபாடுகளுடன் செயல்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை. கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தால் அது ஆட்சி நிர்வாகத்தை பெரும் அளவில் பாதிக்கும். தமிழகத்தில் உள்ள குழப்பத்துக்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story