பூட்டு போட்டு போராட்டமா? இயக்குனர் கவுதமனுக்கு போலீஸ் துணை கமிஷனர் ‘சம்மன்’


பூட்டு போட்டு போராட்டமா? இயக்குனர் கவுதமனுக்கு போலீஸ் துணை கமிஷனர் ‘சம்மன்’
x
தினத்தந்தி 11 Aug 2017 2:30 AM IST (Updated: 11 Aug 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் கவுதமன் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 16-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

ஆலந்தூர்,

கத்திப்பாரா மேம்பாலத்தில் மீண்டும் பூட்டு போட்டு போராட்டம் நடத்தலாம் என தகவல் வந்து உள்ளதால் இயக்குனர் கவுதமன் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 16-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசவில்லை என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி இயக்குனர் கவுதமன் தலைமையில் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் குறுக்கே இரும்பு சங்கிலியை கட்டி பூட்டு போட்டு போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அதேபோல் கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அவர் மீது 107-வது சட்டப்பிரிவில் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வின் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, இயக்குனர் கவுதமனுக்கு ஒரு சம்மன் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி கத்திப்பாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது போல் மீண்டும் அதே போல் போராட்டம் நடத்தக்கூடும் என ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளதால் தங்கள் மீது பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் 107-வது சட்டப்பிரிவு படி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியாகிய நீங்கள், நன்னடத்தைக்கான பிரமாண பத்திரம் வழங்க 2 ஜாமீன்தாரர்களுடன் வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story