கல்லூரி மாணவியை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை கொல்ல முயன்ற தொழிலாளி


கல்லூரி மாணவியை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை கொல்ல முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 12 Aug 2017 2:45 AM IST (Updated: 11 Aug 2017 11:48 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

கல்லூரி மாணவியை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் மாவட்டம் நெரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40) சலவை தொழிலாளி. இவரது மனைவி ஜனனி (23). இவர்களுக்கு நவீன் (4) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் ஜனனிக்கு அதேபகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த தொழிலாளியான முத்துக்குமார் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜனனி அடிக்கடி முத்துக்குமாரை திருமணம் செய்து கொள்ள வேண்டி வற்புறுத்தி வந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் கொல்லிமலையை சுற்றி பார்க்க செல்லலாம் என ஜனனியை அழைத்து சென்று உள்ளார்.

அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் சோளக்காடு நாச்சியாயி கோவில் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான 15 அடி உயரம் உள்ள ‘வியூபாயிண்ட்’–க்கு வந்தனர். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென முத்துக்குமார் ஜனனியின் துப்பட்டாவை அவரின் கழுத்தை இறுக்கியும், கல்லால் தாக்கியும் கீழே தள்ளி விட்டார். இதில் ஜனனி இறந்து விட்டதாக பயந்து போன முத்துக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அங்கு உயிருக்கு போராடிய ஜனனியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ஜனனியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லிமலை செம்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசார் ஜனனியிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தப்பி ஓடிய முத்துக்குமாரை சேலம் புதிய பஸ்நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். கைதான முத்துக்குமார் போலீசில் தெரிவித்ததாவது:–

நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தர்ஷினி என்பவரை காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்ய முயற்சித்தபோது திருநெல்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்தேன். இதையடுத்து வெளியே வந்தபிறகும் தர்ஷினியுடன் பழகி வருகிறேன். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தேன். நான் தர்ஷினியை திருமணம் செய்ய கள்ளக்காதலி ஜனனி தடையாக இருந்தார். மேலும் கள்ளக்காதலி ஜனனி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொல்லிமலைக்கு அழைத்து சென்று கொல்ல முயன்றேன்.

இவ்வாறு முத்துக்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story