கொசுக்களை ஒழிக்க ரூ.13.95 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


கொசுக்களை ஒழிக்க ரூ.13.95 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:15 AM IST (Updated: 12 Aug 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

கொசுக்களை ஒழிக்க ரூ.13.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாமக்கல்

தமிழக அரசு கொசுக்களை ஒழிக்க ரூ.13.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நாமக்கல்லில் தெரிவித்தார்.

நாமக்கல்–மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வருகை தந்தார். அப்போது அவருடன் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் உடன் வந்தனர். அவர்களை மருத்துவபணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி வரவேற்றார்.

அதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு காய்ச்சால் பாதித்த நோயாளிகள் அறையை பார்வையிட்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். அதன்பிறகு மகப்பேறு அறுவை சிகிச்சை பகுதி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த கர்ப்பிணிகளிடம் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததா? சரியான எடையுடன் உள்ளதா? அரசு வழங்கும் உதவி தொகை அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அதன்பின்பு மருத்துவர் மற்றும் செவிலியர் கண்காணிப்பு அறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது இன்னும் ஒரு மாதத்திற்குள் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

அதன்பின்பு நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:–

தமிழகம் முழுவதும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகின்றனர். நாமக்கல்லிலும் அதேபோல தற்போது காய்ச்சல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் கொசுக்களினால் பரவி வருவதால், கொசுக்களை ஒழிக்க ரூ.13 கோடியே 95 லட்சத்தை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. நீட் தேர்வு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்த பிறகே, அதன் மீது தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story