நீர்நிலைகளை பார்வையிட செல்லும் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு தடுக்கக்கூடாது ஐகோர்ட்டு
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பார்வையிட செல்லும் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு தடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை தி.மு.க. வினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். அதை பார்வையிட தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
எனவே, நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபடும் தி.மு.க.வினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும், கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 8-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எம்.துரைசாமி நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கச்சராயன்பாளையத்தில் உள்ள ஏரி உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் தூர்வாரிய ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பார்வையிட மு.க.ஸ்டாலின் சென்றால், அவரை தமிழக அரசு தடுக்கக்கூடாது.
அதேநேரம், தூர் வாரியதை பார்க்க மு.க.ஸ்டாலின் செல்லும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, தூர் வாரப்பட்ட ஏரி, குளம் உள்ளிட்டவைகளை பார்வையிட மு.க.ஸ்டாலினுடன் 25 பேர் மட்டுமே செல்ல வேண்டும். இதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அதேநேரம், அவ்வாறு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு, மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கவேண்டும். எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்காது என்பதையும் அவர் உறுதி செய்யவேண்டும்.
எதிர்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதும், சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதும் போலீசாரின் கடமையாகும். எதிர்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story