அ.தி.மு.க. அணிகளை இணைக்க மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. அணிகளை இணைக்க மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக அரசின் செயல்பாடு படுத்த படுக்கையாக உள்ளது. இது இப்போது மட்டும் அல்ல. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருந்தே படுத்த படுக்கையாகத்தான் உள்ளது.
தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு விலக்கு அளித்திருந்தார். தற்போதைய அரசு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளன. தமிழகத்தில் படித்த ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
தற்போதைய ஆளும் கட்சியை 3, 4 அணிகளாக பிரித்து தமிழகத்தில் கால் ஊன்ற மத்திய அரசு நினைத்தது. அது முடியாமல் போனது. எனவே பிரிந்த அணிகளை மீண்டும் ஒன்றுசேர்க்க மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசின் இந்த செயலை பார்க்கும் போது அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்று உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை தமிழக சுகாதார துறை செயல் இழந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story