ஆரணி பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ஆரணி பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2017 3:15 AM IST (Updated: 13 Aug 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

எல்லைபாதுகாப்பு படைவீரர் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றியபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆரணி, 

ஆரணி பகுதியை சேர்ந்த எல்லைபாதுகாப்பு படைவீரர் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றியபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இலுப்பகுணம் காலனி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 32) திரிபுரா மாநிலத்தில் எல்லைபாதுகாப்பு படைவீரராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஜான்கீர்த்தி (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு கார்த்திகேயன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இங்கு விடுமுறையை கழித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு திரும்புவதாக கூறிச்சென்றார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு அவர் இறந்து விட்டதாக எல்லைபாதுகாப்பு படை அலுவலகத்திலிருந்து குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் வந்தது. இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அவரது உடல் அங்கிருந்து ஆரணிக்கு 12-ந்தேதி (நேற்று) கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை 5 மணி வரை அவரது உடல் வரவில்லை. இந்த நிலையில் கார்த்திகேயனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள னர்.

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறியதாவது:-

எங்களது மகன் மனஅழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக எல்லைபாதுகாப்பு படை அதிகாரிகள் போனில் தெரிவித்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் விடுமுறையில் வந்தபோது அனைவரிடமும் சகஜமாக பேசினார். அவர் பணிக்கு திரும்பியபோது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக எங்களுக்கு தெரிவித்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் 10-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போன் மூலம் எங்களிடம் பேசினார். ஆனால் இரவு 9 மணியளவில் எல்லைபாதுகாப்பு படை அதிகாரிகள் போன் செய்து கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

2-வது முறை போன் செய்து உங்கள் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் 3-வது முறை பேசியபோது பணிச்சுமை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர். ஆனால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையில்லை.

எங்கள் மகன் இறப்பில் அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எல்லைபாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். அப்படியிருக்கும்போது பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி அவரது இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story