கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரி பேட்டி


கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடரும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரி கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று ஓ.என்.ஜி.சி. விழிப்புணர்வு பிரசார குறுந்தகடு வெளியிடும் விழா நடைபெற்றது. குறுந்தகட்டை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் குல்பீர்சிங் வெளியிட, முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். பின்னர் ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் குல்பீர்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்திய அரசின் பொது நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழகத்தில் காவிரி படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிறுவனத்தின் சார்பில் கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய் பூமிக்கு அடியில் இருந்து உறிஞ்சப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு “குத்தாலம் 35” என்ற எண்ணெய் கிணறு அருகே கசிவு ஏற்பட்டு அன்றைய தினம் மாலையே கசிவு சரி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸ் துறையில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடரும். ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையிலும், குஜராத்தின் நர்மதை நதிக்கரையிலும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்ட 110 இடங்களில் தான் எண்ணெய் கிணறு அமைக்கப்பட உள்ளது. புதிய இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்கப்படவில்லை.

நாகை, கடலூர் மாவட்டங் களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கப்பட உள்ளதற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தில் மீத்தேன், ஷேல்கியாஸ் போன்ற எந்த திட்ட பணிகளிலும் இதுவரை ஈடு படவில்லை. தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கதிராமங்கலத்தில் அமைதி நிலவ அங்குள்ள மக்களிடம் விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும்.

கதிராமங்கலத்தில் சமூக சேவை திட்டத்தின் கீழ் குடிநீர் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை. நிலத்தடி நீரின் தரமும் குறையவில்லை. எங்கள் ஆய்வு மீண்டும் இதை உறுதி செய்துள்ளது. கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டது குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பிரசாரம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story