பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கும்


பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கும்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:15 AM IST (Updated: 13 Aug 2017 9:05 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கும் என்று மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய மாதர் சங்கம் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக, மாதர் சங்கத்தின் வரலாறு பற்றிய குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டே‌ஷன் அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாதர் சங்கத்தின் தலைவி பத்மா வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். கிருஷ்ணா அசோசியேட்ஸ் தயாரித்த, மாதர் சங்க வரலாறு பற்றிய தகவல்கள் அடங்கிய குறுந்தகடை நிர்மலா சீதராமன் வெளியிட, மாதர் சங்கத்தின் புரவலரும், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘‘மங்கள்யான் செயற்கைகோளை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பெண்கள் தங்களுடைய மதிப்புகளை உணர்ந்து, ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்காக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும். மாதர் சங்கத்துக்கு தேவையான உதவிகளும் செய்து கொடுக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக டாக்டர் வி.சாந்தா பேசும்போது, ‘‘புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் புற்றுநோய் கண்டுபிடிப்பு மையங்கள் அமைப்பதற்கு தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், மாதர் சங்கத்தின் புரவலர் நந்திதா கிருஷ்ணா, கவுரவ செயலாளர் பார்கவி தேவேந்திரா, நிலைக்குழு உறுப்பினர் வி.யோகவல்லி, கிருஷ்ணா அசோசியேட்ஸ் இயக்குனர் லதாகிருஷ்ணா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story