டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்ற தீர்மான நகலில் கைழுத்திட்ட கட்சி நிர்வாகி பல்டி


டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்ற தீர்மான நகலில் கைழுத்திட்ட கட்சி நிர்வாகி பல்டி
x
தினத்தந்தி 14 Aug 2017 4:14 PM IST (Updated: 14 Aug 2017 4:33 PM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்ற தீர்மான நகலில் கைழுத்திட்ட கட்சி நிர்வாகி திடீர் என மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஒரு அணியும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருந்து வருகிறார். இந்த அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அ.தி.மு.க. அம்மா அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக உள்ளனர். டி.டி.வி.தினகரனை கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் ஜெயலலிதா நியமித்த 27 அ.தி.மு.க நிர்வாகிகள் கையெழுத்திட்டு இருந்தனர்.

தற்போது இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருந்த விவசாய அணி நிர்வாகிகளில் ஒருவராகிய துரை கோவிந்தராஜன் தினகரனுக்கு எதிரான தீர்மானம் என்பதை சொல்லாமலே தன்னிடம் கையெழுத்து பெற்றதாக குற்றம்சாட்டி உள்ளார் மேலும் மேலூரில் நடக்கும் தினகரன் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து உள்ளார்.


Next Story