சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்; எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார்


சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்; எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 5:15 AM IST (Updated: 16 Aug 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தியாகிகள் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

சென்னை,

இந்தியாவின் 71–வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு காரில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

கோட்டை அருகில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ 8.18 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். அங்கிருந்த தென்பிராந்திய தலைமைப்படைத் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் அலோக் பட்னாகர், தாம்பரம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எஸ்.சீனிவாஸ், கிழக்கு மண்டல கடலோர காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ரா, தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரை மரபுப்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைமைச்செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலாளர் அழைத்து சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர், ‘சல்யூட்’ அடித்து ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் 8.27 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். 8.30 மணிக்கு அங்குள்ள கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியை அவர் முதல் முறையாக ஏற்றினார். மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கொடிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘சல்யூட்’ அடித்து வணக்கம் செலுத்தினார்.

அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அப்போது அனைவரும் எழுந்து நின்றனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்தபடி 8.32 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதன்பிறகு 9.15 மணிக்கு கோட்டையில் இருந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார். அப்போது பொதுமக்களுக்கு காரில் இருந்தபடி கையசைத்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே பந்தல்கள் போடப்பட்டு இருந்தன. அங்கு முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் ப.தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், பிறநாட்டு தூதர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story