மரங்களை நட புதிய தொழில்நுட்பம் நல் ஆளுமைக்கான விருது பெற்ற அதிகாரி பேட்டி


மரங்களை நட புதிய தொழில்நுட்பம் நல் ஆளுமைக்கான விருது பெற்ற அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2017 3:45 AM IST (Updated: 17 Aug 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

மரக்கன்றுகளை நடுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்ததால் நல்ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது என்று டாக்டர் கொ.சத்தியகோபால் கூறினார்.

சென்னை,

மரக்கன்றுகளை நடுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்ததால் நல்ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது என்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் கொ.சத்தியகோபால் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:–

பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மரங்கள் பட்டுபோக வாய்ப்பு உள்ளது. புதிய மரக்கன்றுகள் நடும் போது அவை செழிப்பாக வளர்வதற்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுதந்திர தின விழாவில் நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.

வழக்கமாக தேவையான அளவில் குழி தோண்டி, உரம் மற்றும் மணல் போட்டு மரக்கன்றுகள் நடப்படுவது வழக்கம். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வழக்கமான நடைமுறையில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, அதனை சுற்றி நான்கு புறத்திலும் சுமார் 2 அடி ஆழத்தில் 3 முதல் 4 அங்குலம் அளவு கொண்ட 4 குழாய்களை, மரக்கன்றை சுற்றி நட வேண்டும்.

அந்த குழாயில் உரம் மற்றும் ஆற்று மணலை போட்டு தண்ணீர் ஊற்றி விட்டு குழாயை எடுத்துவிடலாம். தொடர்ந்து மரக்கன்றுகளுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் விட்டால் போதும். வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் செல்வதால் செழிப்பாக மரக்கன்றுகள் வளர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மா, பலா போன்ற மரக்கன்றுகளை சோதனை செய்து பார்த்தபோது, வழக்கமாக நடப்படும் மரக்கன்றுகளை விட, புதிய தொழில்நுட்பத்தில் நடும் மரக்கன்றுகள் செழிப்பாகவும், வேகமாகவும் வளர்கின்றன.

இதனால் தண்ணீர் தேவை குறைந்த அளவு போதும். தோட்டங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டால் மின்சார தேவையும், விவசாய செலவும் கணிசமாக குறையும், மரக்கன்றுகளினால் கிடைக்கும் பயன்பாடுகளும் அதிகமாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் குறித்த தகவல்களை அரசுக்கு அளித்தேன். தொடர்ந்து வனத்துறை மற்றும் விவசாயத்துறை சார்பில் நடப்படும் மரக்கன்றுகளை இந்த தொழில்நுட்பத்தில் நட பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு டாக்டர் கொ.சத்தியகோபால் கூறினார்.


Next Story