தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடவேண்டும்
தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் 2017–2018–ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்த 55 ஆயிரம் விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு வந்தன. இந்த நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையிலா? நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலா? என்று மருத்துவ கல்வி இயக்குனரகமும், தமிழக மாணவ–மாணவிகளும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிற காரணத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு முன்னதாக நடத்தப்பட்டது.
பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதற்காக நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விதிவிலக்கு கோரி தமிழக அரசின் சட்ட வடிவு மத்திய அரசிடம் சமீபத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் நீட் தேர்வுக்கு ஆதரவளித்து, பிளஸ்–2 முடித்த ஏராளமான மாணவ–மாணவிகளும் அவர்களது பெற்றோரும் கூடினர். அவர்கள் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ தரவரிசையை வெளியிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முயன்றனர்.
அவர்களிடம், போலீசார் இங்கு உங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றனர். உடனே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு சில மாணவர்கள் மட்டும் மருத்துவ கல்வி இயக்குனரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மருத்துவ கல்வி இயக்குனரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் மருத்துவ கல்வி இயக்குனரகம் அலுவலகம் எதிரே மாணவ–மாணவிகள் கூடி கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்.அப்போது மாணவ–மாணவிகள் சிலர் கூறியதாவது:–
எங்களில் பலர் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஒரு வருடம் நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சியும் பெற்றோம். அதன் காரணமாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளோம். இந்த நிலையில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வின் மதிப்பெண்ணுக்கு விலக்கு கோரி தமிழக அரசின் சட்ட வடிவு மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. இதை கண்டிக்கிறோம்.எங்களில் பலர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் கலந்தாய்வு உள்பட எந்த கலந்தாய்விலும் பங்கேற்கவில்லை. இதுவரை எந்த படிப்பிலும் சேரவில்லை. எனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.